தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை 75 சதவீதம் வீழ்ச்சி... மார்ச் 1-ம் தேதி முதல் அடியோடு நிறுத்தம்! - Informative Tech Video

Breaking


Search This Blog

Wednesday, 22 February 2017

தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை 75 சதவீதம் வீழ்ச்சி... மார்ச் 1-ம் தேதி முதல் அடியோடு நிறுத்தம்!

சென்னை: வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பிரசாரத்தின் விளைவாக தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கமாட்டோம் என மாணவர்கள், இளைஞர்கள் சூளுரைத்தனர். இதைத்தொடர்ந்து மார்ச் 1 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களை விற்கமாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்தது.


இதையடுத்து, கடந்த 4 வாரங்களில் 75 சதவீதம் அளவுக்கு பெப்சி, கோக் விற்பனை குறைந்துள்ளது. இந்த குளிர்பானங்களின் முகவர்கள், விற்பனையாளர்கள் கொண்டு வரும் சரக்குகளை தமிழக வணிகர்கள் புறக்கணித்து வருகின்றனர். வரும் மார்ச் 1 -ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எந்தக் கடைகளிலும் பெப்சி, கோக் விற்கப்படாது என நம்புகிறோம். இந்த இரு குளிர்பான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை அதிலிருந்து விலகும்படி அறிவுறுத்துவோம். அது நடக்காதபட்சத்தில் இளைஞர்கள், மாணவர்களுடன் இணைந்து அதே கருத்தை தீவிரமாக வலியுறுத்துவோம். உள்நாட்டு குளிர்பானங்களை தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டும் என வட மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் எங்களை அணுகி வருகின்றனர். அவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். விரைவில் அனைத்து கடைகளிலும் பதநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்," என்றார். முன்னதாக பெப்சி, கோக் விற்பனையை நிறுத்தவும், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கடையடைப்பு நடத்தியதற்கும், ஜல்லிக்கட்டு போராட்ட குழுவைச் சேர்ந்த தேவராஜ், ஜலீல், கிரேஸ் பானு, காயத்ரி உள்ளிட்டோர் விக்கிரமராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Source

Total Pageviews